தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் வரும் 3-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரி வித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு அடிப் படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை வேலூர் அடுத்த மேல்மொண வூரில் வரும் 3-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
வேலூர் அடுத்த மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய 300-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழா மேல்மொணவூர் இலங்கை தமிழர் முகாமுக்கு எதிரே உள்ள வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெற உள்ளது. விழா நடைபெற உள்ள மைதானம் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், மேல் மொணவூர் இலங்கை தமிழர் முகாமை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நம்முடன் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை வரும் 3-ம் தேதி வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
மற்ற மாவட்ட முகாம்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அடிக்கல் நாட்டுவார்கள். அடிப்படை கட்டமைப்புடன் கூடிய வீடு களுடன் அவர்களின் பிள்ளை களின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யும் அத்தனை திட்டங்களும் ரூ.317 கோடியில் முதல்வர் செயல்படுத்த வேலூர் வரவுள்ளார்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago