திருப்பூரில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்தும் மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்றுதொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்டஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 361 வணிக வங்கிகள் செயல்படுகின்றன. தமிழக அரசின் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சுயவேலை வாய்ப்புத்திட்டங்களான யு.ஓய்.இ.ஜி.பி, பி.எம்.இ.ஜி.பி. மற்றும் நீட்ஸ் திட்டங்களின் மூலமாக 2021-22-ம் ஆண்டுக்கு சுமார் 770 பேருக்கு ரூ.23.43 கோடி அரசு மானியத்துடன் கூடிய ரூ.90 கோடி அளவிலான வங்கிக்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பல்வேறு வங்கிகளின் சார்பில் 5,997 பேருக்கு ரூ.315.83 கோடி வங்கிக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.7733.88 கோடியும், ஏற்றுமதிக்கு ரூ.562.50 கோடியும் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். திருப்பூர் மக்களவைத்தொகுதி உறுப்பினர் சுப்பராயன், தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago