மத்திய அரசு நிதி சேவைகள் துறையின் அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டு மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், விழிப்புணர்வு மற்றும் கடனுதவி வழங்கும் முகாம் நேற்று முன்தினம் செங்கல்பட்டில் நடந்தது. ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் தலைமை வகித்தார்.
இதில், வேளாண்மை, வணிகம், வாகனம், வீடுகட்ட, சிறு, குறு விவசாயம், நடுத்தர தொழில்கள், கல்வி, தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளை அரசு மற்றும் தனியார் வங்கிகள் வழங்கின. இந்த முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 2,753 பயனாளிகளுக்கு ரூ.100 கோடியே 58 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் 17 வங்கிகள் சார்பில் அரங்குகளை அமைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான கடனுதவிகள் குறித்து விளக்கினர்.
முகாமில், சென்னை இந்தியன் வங்கி பொது மேலாளர் ஜி.ராஜேஸ்வரா ரெட்டி, மண்டல மேலாளர் மதி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ் குமார், வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ் குமார் கூறியதாவது: வங்கியாளா்கள், வாடிக்கையாளா்களுக்கு இடையே திட்டங்கள் தொடா்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டம் தோறும் மாபெரும் வாடிக்கையாளர்கள் தொடா்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் நடத்துவதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களுக்குத் தேவையான சுயதொழில் தொடங்குவதற்கும், கல்விக் கடன் போன்ற தகவல்கள் கிடைக்கவும் வங்கியாளா்கள் மூலம் வழிவகை செய்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில் 17 வங்கிகள் பங்கேற்ற முகாம் நடத்தப்பட்டு 2,753 பயனாளிகளுக்கு ரூ.100 கோடியே 58 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago