அனைத்து ஊராட்சிகளிலும் மழைக்கால நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு தன்னிறைவு திட்டம், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் கிராம யோஜனா திட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
சாலைப் பணிகள், பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும், குடிநீர் திட்ட பணிகள், தெரு விளக்கு வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து ஊராட்சிகளிலும் மழைக்கால நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றார். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago