பொய் வழக்குப்போட்டு கைது செய்யப்பட்ட தந்தையை விடுவிக்கக்கோரி இளம்பெண், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் கேத்தாண்டப்பட்டி பரசுராமன்வட்டம், சுகர்மில் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சீனிவாசன் மகள் ஜெயலட்சுமி(23). ஓசூர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அம் மனுவில் கூறியிருப்பதாவது:
‘என் தந்தை சீனிவாசன் கட்டிடத்தொழிலாளி. எங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ராஜேஸ்வரி (75) என்பவரின் குடும்பத்தாருக்கும், எங்களுக்கும் இடையே இடப்பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக எனது தந்தை சீனிவாசன், தாயார் தேன்மொழியிடம், மூதாட்டி ராஜேஸ்வரி அம்மாள் அவரது பேரன்கள் சோம்நாத்(22)கிருஷ்ணகாந்த் (20) ஆகியோர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து ஊர் முக்கியதஸ்தர்களிடம் கூறியபோது அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு வந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது பேரன்கள், எனது தந்தை சீனிவாசனிடம் இடப்பிரச்சினை குறித்து பேச வந்த போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது அதை எனது தாயார் தேன்மொழியும், எனது சகோதரர் அஜீத்குமாரும் தடுக்க வந்தனர். அப்போது எங்கள் குடும்பத்துக்கு ராஜேஸ்வரி குடும்பத்தினர் மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து கடந்த 18-ம் தேதி நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் எனது தந்தை சீனிவாசன் புகார் அளித்தார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்த முன்வராத நாட்றாம்பள்ளி காவல் துறையினர்ராஜேஸ்வரி குடும்பத்தாருக்கு சாதகமாக செயல்பட்டு எனது தந்தை மீது பொய் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர் மீதே வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்திருப்பது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து நாட்றாம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளரிடம் விளக்கம் கேட்கச்சென்ற எனது தாய், எனது சகோதரர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களையும் கைது செய்து விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.
எனவே, பொய் வழக்குப்போட்டு கைது செய்த எனது தந்தையை விடுவிக்க வேண்டும். எனது குடும்பத்தார் மீது பதிவு செய் யப்பட்ட வழக்கை ரத்து செய்து, இடப்பிரச்சினை காரணமாக எங்களுக்கு மிரட்டல் விடுத்து வரும் ராஜேஸ்வரி குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை பெற்ற எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கத்துக்கு உத்தர விட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago