திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜா(60). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மங்கை வழியில் நந்தினி (30) என்ற மகளும், யுவராஜ் (28), கார்த்திக் (24) என 2 மகன்கள் உள்ளனர். 2-வது மனைவி வளர்மதி வழியில் அனிதா(28), அகிலா(24), என 2 மகள்களும், அஜீத்(22) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், ராஜா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்தார். அந்த நிலத்தை வாங்கியவர் அதை மீண்டும்விற்பனை செய்ய முயன்றபோது அதை ராஜாவின் 2-வது மனைவி மகள் அனிதாவின் கணவர் நரசிம்மன் (30) என்பவர் வாங்கினார். இந்த நிலத்தை ராஜா முதல் மனைவி தரப்பினர் வாங்க முயற்சி எடுத்து வந்த நிலையில், 2-வது மனைவி குடும்பத்தார் வாங்கியதால் இரு குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இருப்பினும், ராஜா தனது மகள் அனிதா மற்றும் மருமகன் நரசிம்மனிடம் விவசாய நிலத்தை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தார்.அதற்கு நரசிம்மனின் தந்தை சேட்டு உட்பட யாரும் சம்மதிக்க வில்லை. இதனால், நரசிம்மன் குடும்பத்தையே கொலை செய்ய ராஜாவும், அவரது மகன்களான யுவராஜ், கார்த்திக் ஆகியோர் திட்டம் தீட்டினர்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நரசிம்மன் தனது குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது சமையல் அறையில் 20 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் வைத்து நரசிம்மன் குடும்பத்தாரை கொலை செய்ய முன்றனர்.
அப்போது, நரசிம்மனின் தந்தை சேட்டு சத்தம் கேட்டு கண்விழித்த போது அங்கிருந்த யுவராஜ், கார்த்திக் ஆகியோர் தப்பியோடினர். மேலும், வெடி வைத்து கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியது அம்பலமானது. இது குறித்து கந்திலி காவல் நிலையத்தில் நரசிம்மன் புகார் செய்தார்.
அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாயி ராஜா அவரது மகன்கள் யுவராஜ், கார்த்திக் மற்றும் ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர் வழங்கிய அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் விஜயகுமார் (28),முனுசாமி (26) என மொத்தம் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் இவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்ய வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா அளித்த உத்தரவின் பேரில் ராஜா, யுவராஜ், கார்த்திக் ஆகிய 3 பேர் மீது கந்திலி காவல் துறையினர் குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்து அதற்கான உத்தரவு நகலை வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago