வாவிபாளையம் தொடக்கப்பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகம் : மாநகராட்சி ஆணையரிடம் புகார்

வாவிபாளையம் தொடக்கப்பள்ளியில் அழுகிய முட்டையை வழங்கியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் 18-வது வார்டுக்குட்பட்ட வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 140 குழந்தைகள் படித்து வருகின்றனர். தற்போது, கரோனா காரணமாக பள்ளி திறக்கப்படாததால், சத்துணவுசாப்பிடும் குழந்தைகளுக்கான முட்டைகள், அவர்களது பெற்றோர்களிடம் வழங்கப்படுகின்றன. நேற்று (26-ம் தேதி) தலா 10 முட்டைகள் வீதம் சத்துணவு அமைப்பாளர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்று பார்த்தபோது முட்டைகள் அனைத்தும் அழுகிய நிலையில், புழுக்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அழுகிய முட்டைகளை குப்பையில் கொட்டிவிட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், “பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டபோது,“அழுகிய முட்டை விநியோகம் செய்தது தொடர்பாக, விசாரிக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்