ஈரோட்டில் முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்காரர்கள் அனுமதிக்க வேண்டும், என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், ஈரோடு கடைவீதியில் ஜவுளி மற்றும் இதரப் பொருட்களை வாங்க கூட்டம் அதிகரித்து வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் செயல்படும் கனி ஜவுளிச்சந்தையில் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடக்கும் வாரச்சந்தையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் மொத்த ஜவுளிகளைக் கொள்முதல் செய்து வருகின்றனர்.
வாரச்சந்தையில் வியாபாரிகள் அதிகரிப்பால் ஜவுளிச்சந்தையில் விற்பனை களைகட்டியது. அதேபோல், இங்குள்ள ஜவுளிக்கடைகளில் சில்லறை விற்பனையும் அதிகரித்து இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி அறிவுறுத்தல்
ஈரோட்டில் தற்போது கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பண்டிகை கால கூட்டம் காரணமாக மீண்டும் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், முகக்கவசம் அணிந்த வாடிக்கையாளர்களை மட்டும் கடைக்காரர்கள் அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
தீபாவளிப் பண்டிகையால் முக்கிய வீதிகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க, உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதிகாரிகள் குழுக்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். கடை உரிமையாளர்கள், தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். அதேபோல், கடை பணியாளர்களும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago