இஸ்ரேலில் இருந்து தூத்துக்குடிக்கு - 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் இறக்குமதி :

By செய்திப்பிரிவு

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தேவைக்காக இஸ்ரேல் நாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் வந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகவிவசாயிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு தமிழகத்துக்கு கூடுதல் உரங்களை ஒதுக்கீடு செய்யுமாறு, மத்திய உரத்துறைஅமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், தமிழகத்துக்கு கூடுதல் உரம் ஒதுக்கீடு செய்யும் வகையில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சிவப்பு பொட்டாஷ் 16 ஆயிரம் டன் மற்றும் வெள்ளை பொட்டாஷ் 11 ஆயிரம் டன் என, மொத்தம் 27 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துசேர்ந்தது. இந்தியன் பொட்டாஷ் நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட இந்த உரம் தூத்துக்குடி துறைமுகம் அருகேயுள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டு, 50 கிலோ எடை கொண்ட சாக்கு மூட்டைகளில் பேக்கிங் செய்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு பொட்டாஷ் 8,285 மெட்ரிக் டன், வெள்ளை பொட்டாஷ் 351.100 மெட்ரிக் டன் என மொத்தம் 8636.100 மெட்ரிக் டன் உரம் இதுவரை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவுக்கு வெள்ளை பொட்டாஷ் 1,331.850 மெட்ரிக் டன், கர்நாடகாவுக்கு சிவப்பு பொட்டாஷ் 1,322.850 மெட்ரிக் டன், வெள்ளை பொட்டாஷ் 1322.850 மெட்ரிக் டன் என மொத்தம் 2,645.700 மெட்ரிக் டன், கேரளாவுக்கு சிவப்பு பொட்டாஷ் 635.500 மெட்ரிக் டன், வெள்ளை பொட்டாஷ் 696.350 மெட்ரிக் டன் என 1,331.850 மெட்ரிக் டன் என இதுவரை சிவப்பு பொட்டாஷ் 10,243.350 மெட்ரிக் டன், வெள்ளை பொட்டாஷ் 3,702.150 மெட்ரிக் டன் என 13,945.500 மெட்ரிக் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, சிவப்பு பொட்டாஷ் 5,756.650 மெட்ரிக் டன், வெள்ளை பொட்டாஷ் 7,297.850 மெட்ரிக் டன்என மொத்தம் 13,054.500 மெட்ரிக் டன் உரம் மீதமுள்ளது. அவற்றை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகள்நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்