கரூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து மனு அளித்த ஆதரவற்ற பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் வீடு ஒதுக்கீடு செய்து வழங்கிய மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பாராட்டு தெரிவித் துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கடந்த 11-ம் தேதி நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர், தனது மாற்றுத்திறனாளி மகன் ரவிச்சந்திரனுடன்(29) வந்து கோரிக்கை மனு அளித்தார். அதில், தனது மகன் கை, கால் இயங்காத, வாய் பேச இயலாத நிலையில் இருப்பதாகவும், கணவனால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் தனக்கு அரசு உதவ வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உத்தரவின்பேரில், அந்தப் பெண்ணுக்கு கரூர் காந்திகிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரூ.8.35 லட்சம் மதிப்பிலான வீட்டை ஒதுக்கி செய்து ஆட்சியர் பிரபு சங்கர் உடனடியாக உத்தரவிட்டார்.
மேலும், குடியிருப்புக்கு பயனாளி செலுத்த வேண்டிய தொகையான ரூ.1.88 லட்சத்தை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து செலுத்துவதாக தெரிவித்தார். மனு அளித்த ஒரு மணி நேரத்தில் தனக்கு வீடு ஒதுக்கீடு செய்த மாவட்ட ஆட்சியருக்கு அந்தப் பெண் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து அறிந்த தமிழக தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரின் நடவடிக்கையை அறிந்து அவரை பாராட்டி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளர்.
அதில், குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த ஆதரவற்ற பெண்ணுக்கு உடனடியாக வீடு வழங்கி, அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்களது நிர்வாகப் பணியை மனதாரப் பாராட்டுகிறேன். தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago