கரூர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்றும்(அக்.27), அக்.29-ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, கரூர் வட்டத்தில் காக்காவாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இன்று (அக்.27), உப்பிடமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் அக்.29-ம்தேதி, அரவக்குறிச்சி வட்டம் அரவக்குறிச்சி, வேலம்பாடி பகுதிகளுக்கு அரவக்குறிச்சி விஏஓ அலுவலகத்தில் இன்று, அம்மாப்பட்டி, ஈசநத்தத்துக்கு ஈசநத்தம் விஏஓ அலுவலகத்தில் 29-ம் தேதி, மண்மங்கலம் வட்டம் காதப்பாறை விஏஓ அலுவலகத்தில் இன்று, ஆத்தூர் விஏஓ அலுவலகத்தில் 29-ம்தேதி, புகழூர் வட்டம் திருக்காடுதுறை ஆலமரத்துமேடு சமுதாயக்கூடத்தில் இன்று, காருடையாம்பாளையம் சமுதாயக் கூடத்தில் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதேபோல, குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று, மருதூர் தெற்கு விஏஓ அலுவலகத்தில் 29-ம் தேதி, கிருஷ்ணராயபுரம் வட்டம் கிருஷ்ணராயபுரம் வடக்கு விஏஓ அலுவலகத்தில் இன்று, கள்ளப்பள்ளிக்கு சிந்தலவாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் 29-ம் தேதி, கடவூர் வட்டம் தேவர்மலைக்கு குருணிகுளத்துப்பட்டி விஏஓ அலுவலகத்தில் இன்று, ஆதனூர் கிராமத்துக்கு எருதிக்கோன்பட்டி விஏஓ அலுவலகத்தில் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago