கல் வெட்டியெடுக்க உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்மிக்கல், ஆட்டுக்கல், கிரைண்டர் கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி பூண்டுக்கல், கிரைண்டர் கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு வழி வகை செய்யக்கோரியும், உயர்நீதிமன்றத் தடையில் இருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம், நல்லகட்டிபாளையம், பெத்தம்பாளையம், வெள்ளியம்பாளையம், பெட்டிக்கடை, தொட்டியவலவு, மொரட்டுபாளையம், திம்மநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், சேடர்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆட்டுக்கல், அம்மிக்கல், இஞ்சி பூண்டுக்கல், கிரைண்டர் கல் ஆகியவற்றை வடிவமைத்து விற்பனை செய்கிறோம்.
எங்களை தொழில் செய்ய அனுமதிக்கின்ற முறையில், உயர்நீதிமன்றத்துக்கு உரிய விளக்கம் அளித்து, உயர்நீதிமன்றத் தடையில் இருந்து எங்கள் தொழிலுக்கு மட்டும் விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கற்களால் தான் கோவையில் கிரைண்டர் தொழில் இயங்கி வருகிறது. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது அனைவரும் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago