கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக சாட்சிகளை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வாளையாறு மனோஜ்தவிர மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர் விசாரணையின் அடிப்படையில், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சமுத்திரம் காட்டு வளவை சேர்ந்த தனபால் (44), ஆத்தூர் சக்தி நகர் வடக்கு காட்டை சேர்ந்த ரமேஷ் (34) ஆகியோர் நீலகிரி மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கூடலூர் கிளைச் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் சாட்சியங்களை கலைத்ததாக தெரிய வந்ததை அடுத்து, இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக முக்கிய பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாக புகார் தெரிவித்து வந்த தனபால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago