போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரியில் - ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம் காணொலி மூலம் முதல்வர் திறந்தார் :

By செய்திப்பிரிவு

போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.48 லட்சத்தில் கட்டுப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை, தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப் பள்ளி ஊராட்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் டி.மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

அப்போது ஆட்சியர் கூறியதாவது:

வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு சட்ட ரீதியான உதவிகள், மருத்துவ ரீதியான உதவிகள், காவல் துறை ரீதியான உதவிகள், உளவியல் ரீதியான ஆலோசனைகள் இச் சேவை மையத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் தற்காலிக தங்கும் வசதி, அவசர நடவடிக்கை, சேவை மீட்பு நடவடிக்கை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் இந்த மையத்தை 181 என்ற அவசர அழைப்பு எண்ணிற்கோ அல்லது நேரடியாகவோ புகார் அளித்து சேவைகளை பெறலாம். இம்மையத்தில் மூத்த ஆலோசகர்கள் உள்ளிட்ட மொத்தம் 7 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில் டிஎஸ்பி விவேகானந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி, உதவி பொறியாளர் சேகர், மருத்துவர் சுஜிதா ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்