கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை - முட்டல் அருவி வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை பத்திரமாக மீட்பு : பயணிகள் குளிக்க தற்காலிகத் தடை

By செய்திப்பிரிவு

ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல்அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 6 பேர் சிக்கினர்.இதில், சிக்கிய தாய் மற்றும் குழந்தையை சக பயணிகள் பத்திரமாக மீட்டனர். தொடரும் வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்க பயணிகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலம் வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் குற்றாலம் எனப்படும் இந்த அருவி, கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ளது. இங்கு சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.

இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே மழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. கல்வராயன் மலைப்பகுதிகளிலும் அவ்வப்போது, கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆனைவாரி முட்டல் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது.

நேற்று முன்தினம் மாலை அருவியில் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியது. இதை பார்த்த அங்கு கண்காணிப்புப் பணியில் இருந்த வனத்துறையினர் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்தனர்.

இதையடுத்து, பயணிகள் பலர் அருவி பகுதியில் இருந்து வெளியேறியபோது, திடீரென அருவியில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் இருந்து வெளியேற முடியாமல் குழந்தையுடன் இருந்த பெண் உள்ளிட்ட 6 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் வேறு வழியின்றி அருவி யின் மறுகரையில் ஒதுங்கினர்.

தொடர்ந்து வெள்ளம் அதிகரித்தது. இதையடுத்து, மறுகரையில் சிக்கிய ஆண்கள் இருவர் அங்கிருந்த பாறை மீது ஏறி குழந்தையுடன் பெண்ணை பத்திரமாக மீட்டனர். மேலும், இருவர் பாறை மீது ஏற முயன்றபோது, தவறி அருவியில் பெருக்கெடுத்து கொட்டிய வெள்ளத்தில் விழுந்தனர். இதில், அவர்கள் சிறிது தூரம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் சற்று தூரத்தில் இருவரும் கரை ஒதுங்கி தப்பித்தனர்.

அருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற் பட்டுள்ளதால், அருவியில் குளிக்கவும், அப்பகுதிக்கு செல்லவும் பயணிகளுக்கு வனத்துறை தற்காலிகத் தடை விதித்துள்ளது.

மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது, ``மழைக்காலம் என்பதால் பாதுகாப்பு கருதி சேலம் வனக்கோட்டத்தில் உள்ள ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலா பூங்கா, ஆத்தூர், கரடியூர் காவேரி பீக் சூழல் சுற்றுலா மையம், ஏற்காடு, வழுக்குப்பாறை சூழல் சுற்றுலா மையம், டேனிஷ்பேட்டை ஆகியவை இன்று (நேற்று) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.மேலும், காப்புக்காட்டை யொட்டியுள்ள சிறு குறு நீரோடைகளில் பொதுமக்கள் குளிக்கவும், செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. மீறினால் வனச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்