கீழ்பவானி பாசனத் திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனின் பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் விவசாய அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
ஈரோடு எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, பெருமுயற்சி எடுத்து, கீழ்பவானி அணை (பவானிசாகர் அணை) மற்றும் பாசனத் திட்டத்தை தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் பெற்றுத் தந்தார். அவரது முயற்சியால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்று பாசனம் பெறுகின்றன. கீழ்பவானி பாசனத் தந்தை என போற்றப்படும் தியாகி ஈஸ்வரனின் பிறந்த நாள் நேற்று அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் நடந்த விழாவில், கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி, செய லாளர் த.கனகராஜ், நம்ம ஊர் அமைப்பின் அமைப்பாளர் பூபதி, முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் மு.ரவி, இயற்கை ஆர்வலர் அறச்சலூர் செல்வம், தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்கத் தலைவர் மெ.கு.பொடரான், முறைநீர் பாசனசபைத் தலைவர் கே.டி.பழனிசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறச்சலூரில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்திற்கு தியாகி ஈஸ்வரன் பெயரைச் சூட்ட வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் விவசாய சங்கங்களின் சார்பாக நடந்த நிகழ்வில், தியாகி ஈஸ்வரன் படத்துக்கு திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில், விவசாய சங்க மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலாளர் சுப்பு, செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுநாதன், பழங்குடி மக்கள் நலச் சங்க தலைவர் குணசேகரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஈபி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், தியாகி ஈஸ்வரன் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago