தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவது வழக்கம். இவை ஒவ்வொரு மாதமும் அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்.
இந்நிலையில், நிகழாண்டு தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கப்படவில்லை, மேலும், போராட்டக் காலத்தை பணிக்காலமாக கருதி அரசு அறிவித்த சம்பளமும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் நேற்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு, பட்டுக்கோட்டை வட்டத் தலைவர் என்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் வி.நல்லதம்பி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அப்போது, மற்ற வட்டங்களில் கிராம உதவியாளர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை வட்டத்தில் மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பி முழக்கமிட்டனர். அவர்களுடன் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் பேசி, பண்டிகை முன்பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago