திருச்சி அருகே வெவ்வேறு இடங்களில் - மின்னல் தாக்கி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு :

திருச்சி அருகே நேற்று இரு வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த வீரமுத்து மகன் வேலாயுதம் (60), பாண்டு மகன் சங்கர் (45). உள்ளிட்ட சிலர், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பத்தாளப்பேட்டை புத்தாம்பூரில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில், இவர்கள் நேற்று பத்தாளப்பேட்டையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வேலாயுதம் உயிரிழந்தார். காயமடைந்த சங்கர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் இந்தலூர் ஊராட்சியைச் சேர்ந்த சின்னையன் மகள் ரங்கம்மாள் (48), திருவெறும்பூர் அருகேயுள்ள கிளியூரில் நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் ரங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேருக்கு காது பாதிப்பு

திருச்சி மாவட்டம் இனாம்குளத்துார் அருகேயுள்ள சின்ன ஆலம்பட்டியில் செல்வம்(60) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கியதில், வீட்டின் ஒரு சுவரில் விரிசல் ஏற்பட்டதுடன், மின் சாதனப் பொருட்களும் சேதமடைந்தன.மேலும், வீட்டிலிருந்த செல்வம், அவரது மனைவி இந்திரா (50), மகன் செல்வகுமார் (29), செல்வத்தின் உறவினர்கள் தனலட்சுமி (60), ஆனந்தகுமார் (31) ஆகிய 5 பேருக்கும் காதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களை ரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி, அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி ஆகியோர் நேற்று சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

மீனவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் மல்லிப்பட்டினம் கே.ஆர்.காலனியைச் சேர்ந்த பெரியய்யா மகன் கருப்பையா(37) மற்றும் கார்த்திகேயன், அகமத் மைதீன், சந்திரன் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நள்ளிரவு 1 மணியளவில் மல்லிப்பட்டினத்தில் இருந்து கிழக்கே 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இதில், திடீரென மின்னல் தாக்கியதில் ஃபைபர் படகை இயக்கிக் கொண்டிருந்த கருப்பையா(37) படுகாயமடைந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலத்துடன் சக மீனவர்கள் நேற்று அதிகாலை மல்லிப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE