இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க இதுவரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நவ.1 முதல் பள்ளிகளை திறப்பதில் மாற்றமில்லை. மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. தீபாவளி முடிந்த பிறகும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம்.
கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால், கற்றல் இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பென்சிலைப் பிடித்து எழுதுவது, எழுத்துக்கூட்டிப் படிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதை எதிர்கொள்ளும் விதமாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதல்வர் வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
இத்திட்டத்துக்கு 1.70 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். இதுவரை 50,000 பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். இதற்காக பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இத்திட்டம் நவ.1-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் ஓரிரு நாளில் வெளியிடுவார் என்றார்.
பின்னர், கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் தொடக்கப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்.பி செ.ராமலிங்கம், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க.அன்பழகன், துரை.சந்திரசேகரன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago