சொரியாசிஸ் தொட்டால் பரவும் தொற்று நோயல்ல : அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல்

By செய்திப்பிரிவு

சொரியாசிஸ் நோய் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் தொற்று நோயல்ல என்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

உலக சொரியாசிஸ் தினத்தையொட்டி திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல்நோய் மருத்துவத்துறை மற்றும் ஐஏடிவிஎல் தமிழ்நாடு கிளை சார்பில் சொரியாசிஸ் தின விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் வரும் நவம்பர் 1-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

இதன் தொடக்கமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சொரியாசிஸுக்கு எதிராக ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்று மருத்துவக் கல்லூரி முதல்வர் எம். ரவிச்சந்திரன் பேசியதாவது:

சொரியாசிஸ் என்பது மனித சுயஎதிர்ப்பு சக்தியின் விளைவாக தோலில் ஏற்படும் ஒருவித அழற்சியாகும். ஆனால், இது ஒரு தொற்றுநோய் என்றும் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் என்றும் மக்கள் தவறாககருதுகிறார்கள். சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்யலாம், குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். இந்நோய் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டலாம். இதனால் குழந்தைக்கு நோய் பரவாது. இது உயிருக்கு ஆபத்தான நோயல்ல. ஆனால் முறையற்ற மற்றும் தாமதமான சிகிச்சை, சுயசி கிச்சைகளால் பக்க விளைவுகள் ஏற்படும்.

இந்நோய் குறித்த தவறான புரிதல்களால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது. உரிய மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்றால் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா காலத்தில் 971 சொரியாசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதில் 494 ஆண்கள், 357 பெண்கள், 8 குழந்தைகள் அடங்குவர். இவர்களில் 190 பேருக்கு புதிதாக நோய் கண்டறியப்பட்டிருக்கிறது.

சொரியாசிஸ் சிறப்பு சிகிச்சையகம் ஒவ்வொரு வாரமும்வெள்ளிக்கிழமை செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். சொரியாசிஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரத்தை அவர் வெளியிட்டார்.

தோல்நோய் மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் நிர்மலாதேவி பேசியதாவது:

உலகில் 3 சதவீதம் பேர் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்றி சமூக, பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 0.44 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை மக்களைஇந்நோய் பாதிக்கிறது. இந்நோயாளிகளில் 40 சதவீதம்பேர் புறஊதா கதிர் சிகிச்சையால் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

துணை முதல்வர் டாக்டர் மு. சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன், சிறுநீரகவியல்துறை பேராசிரியர் ராமசுப்பிரமணியன், பொதுமருத்துவத்துறை தலைவர் டாக்டர் அழகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்