திருப்பத்தூர் மாவட்டத்தில் - சர்க்கரை ஆலைகளில் அரவையை தொடங்க வேண்டும் : ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சர்க்கரை ஆலைகளில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவையை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு, வேலை வாய்ப்பு, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட 253 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கேத்தாண்டப்பட்டி பகுதியிலும், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியிலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 2021-2022-ம் ஆண்டுக் கான அரவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் பதிவு செய்யப்பட்ட கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’’என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்பகிர்மான தொழிற்சங்கத்தினர்...

திருப்பத்தூர் மாவட்டம் மின்பகிர்மான வட்டம் மின்வாரிய செயற் பொறியாளராக பணியாற்றி வந்த எஸ்.கிருஷ்ணன் தனது அலுவலகத்தில் தொழில் நுட்பப்பிரிவில் பணியாற்றி வந்த 4 பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட 4 பெண்களும் கடந்த மாதம் 20-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் புகார் மனு அளித்தனர்.

இதற்கிடையில், கிருஷ்ணன் திருப்பத்தூரில் இருந்து மற்றொரு மின்வாரிய அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், ‘பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மின்வாரிய செயற் பொறியாளர் கிருஷ்ணனன் மீது துறை ரீதியான நடவடிக்கையை மின்வாரியம் எடுக்கவில்லை. மின்வாரிய மேல் அதிகாரிகள் அவருக்கு சாதகமாகவே செயல்படுகின்றனர். கிருஷ்ணன் மீது 22 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். தற்போது அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பாலியல் புகார் அளித்த 22 பெண்களுக்கும் கிருஷ்ணன் நிர்வாக ரீதியாக மிரட்டல் விடுத்து வருகிறார்.

எனவே, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான செயற் பொறியாளர் கிருஷ்ணன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து, மின்வாரிய பெண் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்