வேலூர் சிஎம்சி மருத்துவமனை யில் மருத்துவ ஆராய்ச்சிக்கான ஃப்ளோசைட்டோமெட்ரி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற நவீன ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் சிஎம்சி மருத்துவ மனையில் பெக்டன் டிக்கின்சன் என்ற நிறுவனம் சார்பில், தமிழகத்தில் முதல் முறையாக ஃப்ளோ சைட்டோமெட்ரி பிரிவில் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் என்ற மையத்தை தொடங்கியுள்ளனர்.
ஃப்ளோ சைட்டோமெட்ரி என்பது செல்கள் மற்றும் குரோமோசோம்கள் போன்ற நுண்ணிய துகள்களை வரிசைப் படுத்த, பிரிக்க மற்றும் ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறையாகும்.
இது நோய் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையம் மருத்துவ பயன்பாடுகளுக்கான தேசிய குறிப்பு மையமாக செயல்படும்.
இந்தியா முழுவதும் உள்ள ஹீமாட்டாலஜிஸ்டுகள், ஆய்வக வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்களிடையே மருத்துவ நோயறிதலில் ஃப்ளோ சைட்டோமெட்ரியின் பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இது உதவும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிஎம்சி மருத்துவமனையின் ஹீமட்டாலஜி துறையின் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் கூறும்போது, ‘‘ஸ்டெம் செல் கணக்கீடு, முதன்மை நோய் எதிர்ப்பு குறைபாடு, கோளாறுகள் மற்றும் ரசாயன பகுப்பாய்வு நடத்துவதற்கு இந்த ஆய்வகம் உறுதுணையாக இருக்கும்.
மேலும், ஆராய்ச்சி நடவடிக்கைக்கு துணையாக இருக்கும். இந்த ஆய்வகம் மூலம் நோயறிதல் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago