சிவகங்கையில் நிற்காமல் செல்லும் செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரயில் : பயணிகள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

செகந்திராபாத்-ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் மாவட்டத் தலைநகரான சிவகங்கையில் நின்று செல்லாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் திருப்பதி சென்று வர ஏதுவாக புதிய ரயில் இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அக்.19-ம் தேதியில் இருந்து செகந்திராபாத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப் பட்டு வருகிறது. இந்த ரயில் செக்கந்திராபாத்தில் இருந்து வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 9.25 மணிக்குப் புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரத்தை அடைகிறது.

அதேபோல் மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு, சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு செக்கந்திராபாத்தை அடைகிறது. இந்த ரயில் திருப்பதி வழியாக இயக்கப்படுவதால், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த ரயில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, மானாமதுரை ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது. சிவகங்கையில் நிற்காததால் அப்பகுதி பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ரயிலை சிவகங்கையில் நின்று செல்ல கார்த்தி சிதம்பரம் எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இந்த ரயில் தற்போது தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகிறது. அதனை நிரந்தரமாக இயக்க வேண்டுமெனவும் சிவகங்கை மாவட்ட ரயில்வே பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்