தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் - ஓசூர் வட்டத்தில் கேழ்வரகு மகசூல் அதிகரிக்க வாய்ப்பு :

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் வட்டத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் 600 மில்லி மீட்டருக்கும் மேலாக பெய்துள்ளதால், மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள கேழ்வரகு மகசூல் இருமடங்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஓசூர் வட்டத்தில் எஸ்.முதுகானப்பள்ளி, பாரந்தூர், பழைய மத்திகிரி, பாகலூர், சின்னகொல்லு, பெரிய கொல்லு, மத்தம் அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரி பயிராக கேழ்வரகு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய உணவு தானிய பயன்பாட்டில் கேழ்வரகு முதலிடத்தில் உள்ளது. இதனால்,கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விற்பனை வாய்ப்பு

இக்கிராமங்களில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மழையை நம்பி மானாவாரியில் கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கேழ்வரகு விளைச்சலுக்கு ஏற்ற வகையில் மழையுடன் மண் வளமும் கைகொடுத்து வருகிறது இங்கு விளையும் தரமான மற்றும் சுவைமிக்க கேழ்வரகு தானியத்துக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, ஆனேக்கல், கனகபுரா, மளவள்ளி, கொள்ளேகால், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இதனால், அங்குள்ள மக்களின் உணவுத் தேவைக்காக ஓசூர், தளி உள்ளிட்ட கிராமப் பகுதிக்கு நேரடியாக வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கேழ்வரகை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், இடைத்தரகர் பிரச்சினை இன்றி கணிசமான லாபத்துடன் கேழ்வரகு தானியத்தை விவசாயிகள் விற்பனை செய்யும் சந்தை வாய்ப்பும் கிடைப்பதால், கேழ்வரகு விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

ரூ.1 லட்சம் வரை லாபம்

இதுதொடரபாக பழைய மத்திகிரியைச் சேர்ந்த விவசாயி ரவி கூறியதாவது:

ஒரு ஏக்கரில் கேழ்வரகு பயிரிட ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. உரிய காலத்தில் மழை பெய்தால் ஒரு ஏக்கரில் 25 முதல் 30 மூட்டைகள் வரை கேழ்வரகு அறுவடை செய்யலாம். 100 கிலோ எடை உள்ள ஒரு மூட்டை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற் பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. இந்தாண்டு தென் மேற்கு பருவமழை உரிய காலத்தில் பெய்ததால், கேழ்வரகுமகசூல் இருமடங்காக கிடைக்க வாய்ப் புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக ஓசூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் கூறியதாவது:

ஓசூர் வட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டரில் கேழ்வரகு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிக மகசூல் தரும் ரகங்களானகே.எம்.ஆர்-301 (கர்நாடகா மண்டியா ராகி) மற்றும் கோ-15 ஆகிய கேழ் வரகு ரகங்களையே விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

மானியத்தில் விதை

கடந்தாண்டைப்போல, நடப் பாண்டிலும் 90 சதவீதம் தென்மேற்கு பருவமழை கைகொடுத் துள்ளதால் மகசூல் அதிகரிக்கும் நிலையுள்ளது. வேளாண்மைத் துறை விதைப்பண்ணை மூலமாக கேழ்வரகு பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் கேழ்வரகு விதை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்