எல்லை விரிவாக்கம் செய்யாமல் மாநகராட்சியானது கரூர் :

By க.ராதாகிருஷ்ணன்

கரூர் நகராட்சி எல்லை விரிவாக்கப்படாமலேயே ஏற்கெனவே உள்ள 48 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1874-ல் கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டது. அதன்பின், 1988-ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், கடந்த 2011-ல் கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டன. இதனால், கரூர் நகராட்சியில் இருந்த வார்டுகளின் எண்ணிக்கை 36-லிருந்து 48 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் வாக்குறுதி அளித்திருந்தனர்.

அதன்படி, கடந்த ஆக.23-ம் தேதி கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்பின் கரூர் நகராட்சியுடன் புலியூர் பேரூராட்சி, ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, காதப்பாறை, ஆத்தூர் பூலாம்பாளையம், பஞ்சமாதேவி மின்னாம்பள்ளி, ஏமூர், மேலப்பாளையம், கருப்பம்பாளையம் ஊராட்சியின் திருமாநிலையூர் பகுதி ஆகியவற்றை இணைப்பது தொடர்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏமூர், மேலப்பாளையம் ஊராட்சிகள், புலியூர் பேரூராட்சி தவிர்த்து மற்ற பகுதிகளை கரூர் நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், கரூர் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்ட 5 ஊராட்சிகளில் கடந்த 2019-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் 2025 ஜனவரி வரை இருப்பதால், அதன்பிறகே மாநகராட்சியுடன் அப்பகுதிகளை சேர்க்க முடியும். எனவே, தற்போது கரூர் நகராட்சியுடன் பிற உள்ளாட்சிகளை இணைத்து எல்லையை விரிவாக்கம் செய்யாமல், தற்போதுள்ள 48 வார்டுகளைக் கொண்ட 53.26 ச.கி.மீட்டர் பரப்பளவை அப்படியே கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த 20-ம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பான அரசாணை கடந்த 21-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை கரூர் மாநகராட்சி அந்தஸ்துடன் எல்லை விரிவாக்கம் செய்யப்படாமல் அப்படியே 48 வார்டுகளுடன் எதிர்கொள்ள உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE