உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் வறண்டு கிடந்த ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சிலநாட்களாக வழக்கத்துக்கு மாறாகபெய்து வரும் கன மழையால் பலஆண்டுகளாக தண்ணீரையே காணாத ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நூற்றுக்கணக்கான இடங்களில் விவசாய கிணறுகள் மழை நீரால் நிரம்பியுள்ளன.
தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளிலும் மழை வெள்ளம் நிரம்பி காணப்படுகிறது.
இதேபோல பல கிராமங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில்உள்ள வேளாண், தோட்டக்கலை பயிர்கள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழையால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், அதானால் ஏற்பட்டுள்ள அழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதன் பாதிப்பு விவரங்களை சேகரித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதே போல கிராமப்புறங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. தரை மட்ட பாலங்கள் சேத மடைந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருமூர்த்தி அணையின் நீர் பிடிப்பு பகுதியான பாலாற்றில்(பஞ்சலிங்க அருவி) நேற்று முன் தினம் நிலவரப்படி விநாடிக்கு 50 கன அடி நீர் வரத்து இருந்தது. அதனால் அணையின் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. இதுகுறித்து அணையின் பொறியாளர்கள் கூறும்போது,’ இதர பகுதிகளில் பெய்த அளவு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. நேற்று மாலை பெய்த கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கக் கூடும். ஆனால் அதன் விவரம் இன்று தான் தெரிய வரும். இறுதியாக எடுத்த நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 40 அடியாகவும், அணைக்கு விநாடிக்கு காண்டூர் கால்வாய் மூலம் 873 கன அடியும், பாலாறு மூலம் 52 கன அடி உட்பட 925 கன அடியும் நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 225 கன அடி நீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டது.
இதே போல அமராவதி அணையின் நீர் மட்டம் 82 அடியாகவும், நீர் வரத்து 710 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக 200 கன அடி ஆற்றில் திறக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago