ஓசூரில் தொடர்மழையால் - கொத்தமல்லி உற்பத்தி குறைந்து சந்தையில் விலை உயர்வு :

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை காரணமாக கொத்தமல்லி தோட்டம் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் ஓசூர் சந்தையில் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகி வந்த ஒரு கட்டு கொத்தமல்லியின் விலை ரூ.60 வரை உயர்ந்துள்ளது.

ஓசூர், கெலமங்கலம், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலமாக குறுகிய காலத்தில் அதிகளவில் லாபம் தரும் தோட்டப்பயிர்களான கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட தோட்டப்பயிர்களை விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.

இங்கு விளையும் தரமான மற்றும் வாசம் மிகுந்த கொத்தமல்லி சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தினசரி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இங்கு விளையும் கொத்தமல்லிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதிலும் ஓசூர் கொத்தமல்லிக்கு பெங்களூரு காய்கறி சந்தை பிரதான சந்தையாக விளங்கி வருகிறது.

இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் கொத்தமல்லியை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லி தோட்டத்தில் மழைநீர் தேங்கி 50 சதவீதம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓசூர் சந்தைக்கு கொத்தமல்லி வரத்து குறைந்து விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனையாகி வந்த கொத்தமல்லியின் விலை தற்போது ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.60 வரை விலை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் ஒன்றியம் எடவனஹள்ளி கிராமத்தில் கொத்தமல்லி பயிரிட்டுள்ள விவசாயி மது கூறியதாவது:

ஒரு ஏக்கர் கொத்தமல்லி பயிரிட 7 கிலோ முதல் - 8 கிலோ வரை கொத்தமல்லி விதைகள் தேவைப்படுகிறது.

ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. கொத்தமல்லி பயிரிடப்பட்ட நாளில் இருந்து 35 நாள் முதல் 45 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கொத்தமல்லியை 9 ஆயிரம் கட்டுகள் முதல் 10 ஆயிரம் கட்டுகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து பெய்து வருவதால் கொத்தமல்லி உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்