ஓசூர் மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் :

ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமை தாங்கி பேசியதாவது:

சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சுகாதார நிலையம், கற்றல் மையங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை நமக்கு நாமே திட்டத்தில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஓசூரில் டைட்டான், டிவிஎஸ், அசோக்லேலாண்ட் போன்ற பெரிய தொழிற்சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் சிஎஸ்ஆர் நிதி மூலமாக நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்று ஓசூர் மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நகரை அழகுப்படுத்தவும் முன்வர வேண்டும்.

இத்திட்டத்தில் 50 சதவீதம் நிதியை மக்கள் வழங்கினால் மீதமுள்ள 50 சதவீதம் நிதியை அரசு வழங்கும். திட்ட மதிப்பீட்டை மக்களே செயல்படுத்தலாம் அல்லது தனியார் நிறுவனங்களே செயல்படுத்தலாம். ஓசூர் மாநகராட்சி 634 கி.மீ. நீளமுள்ள சாலைகளை நிர்வகித்து வருகிறது. அதற்கு மட்டும் ரூ.320 கோடி நிதி தேவைப்படுகிறது என்றார்.

மேலும் நமக்கு நாமே திட்டத்தில் ஓசூர் மாநகராட்சியில் ரூ.10 கோடி நிதியில் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும், பெரிய தொழிற்சாலைகள், குடியிருப்பு சங்கங்கள், ரோட்டரி போன்ற தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஓசூர் ரோட்டரி சங்கங்கள் ஓசூரில் 40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் செலவினங்களை ஏற்பதாக தெரிவித்து ரூ.45 லட்சத்துக்கான காசோலையை ஆணையர் செந்தில் முருகனிடம் வழங்கி நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தனர். இக்கூட்டத்தில் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து குடியிருப்பு நலச்சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், ஓசூர் மக்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்