தாம்பரம் கோட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பில் - 99 இடங்களில் 100 கேவி திறன் டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பு :

By செய்திப்பிரிவு

தாம்பரம் மின் கோட்டத்தில் குறைந்த மின் அழுத்தம் மற்றும்உயர்ந்த மின்னழுத்தம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ரூ.7 கோடிமதிப்பில் 99 இடங்களில் 100 கேவி திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தாம்பரம் மின் கோட்டத்தில் 25 உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் மற்றும்அதிக மின் அழுத்தம் அதிகமாகஇருப்பதால் மின் சாதன பொருட்கள் தொடர்ந்து சேதமடைந்து வந்தன.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இந்த பிரச்சினைகளைப் போக்க மின் வாரிய அதிகாரிகள் தாம்பரம் கோட்டத்தில் வந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து 99 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால், புதியதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

80 சதவீத பணிகள் நிறைவு

இந்நிலையில், பரிந்துரையின் பேரில் தாம்பரம் மின் கோட்டத்தில் 99 இடங்களில் ரூ.7 கோடி செலவில், 100 கேவி திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஓரிரு வாரங்களில் மீதமுள்ள பணிகள் நிறைவடையும். இதனால், குறைந்த மின் அழுத்தம், உயர் மின் அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் தீரும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்