ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு - பூங்காவை திறக்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ரூ.20 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட பூங்காவில், பராமரிப்புப் பணிகள் முடிந்து ஒருமாதம் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடிமாநகராட்சியல் 48 வார்டுகள் உள்ளன. இதில் 18-வது வார்டு பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அமைந்து உள்ளது. இங்குசுமார் 4,500 வீட்டுமனைகள் உள்ளன. சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக செக்டார் 1-ல் நியாயவிலை கடையின் எதிர்புறம்,2015-ம் ஆண்டு ரூ.20லட்சம் செலவில், புதிய பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பூங்காவை அப்போதைய நகர்மன்றத் தலைவரும், தற்போதைய பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

முதியோர், இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்தி வந்த இந்தப் பூங்கா கரோனா தொற்றுஊரடங்கின்போது மாநகராட்சியின் உத்தரவின் பேரில் பல மாதங்களாக மூடி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று நடைபாதை, ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டன. மேலும், புதிய மின்விளக்கு கம்பங்களும் பொருத்தபட்டன.

பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு, பூங்கா திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்த முடியாமல் சிரமம்பட்டு வருகின்றனர். எனவே, இப்பூங்காவை உடனடியாகத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்