கரூரில் தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட ஊராட்சியின் 12 வார்டு உறுப்பினர்களும் வந்திருந்த நிலையில், திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரும், தேர்தல் அலுவலருமான மந்திராசலம் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகக்கூறி அங்கிருந்து காரில் புறப்பட்டார். இதையடுத்து, அவரது காரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 57 பேரை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்து இரவு விடுவித்தனர்.
இதுகுறித்து தேர்தல் அலுவலர் மந்திராசலம் தாந்தோணிமலை போலீஸில் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், சட்டவிரோதமாக அதிகாரியை தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago