ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தர கோசமங்கை, திருப்புல்லாணி உள்ளிட்ட 7 இடங்களில் ரூ.1979 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவை ஏடுகள் குழுவின் தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆண்டறிக்கை தொடர்பாக ஆய்வு நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்த சட்டப்பேரவை ஏடுகள் குழுவின் தலைவர் கம்பம் நா. ராமகிருஷ்ணன் பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு நாள் மின் தேவை 118 மெகாவாட்.
நாளொன்றுக்கு சராசரியாக 187.2 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு மின்மிகை மாவட்டமாக திகழ்கிறது.
மாவட்டத்தில் அக்காள்மடம், நென்மேனி, கோவிலாங்குளம், கீழராமநதி, எம்.கரிசல்குளம், திருஉத்திரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய இடங்களில் ரூ.1979 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
ஏற்கெனவே கடலாடி, ராமேசுவரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தலா 33 கேவி திறன்கொண்ட துணை மின் நிலையங்களை 110 கேவி திறன் கொண்டதாக மேம் படுத்தப்படும்.
மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், நரிப்பையூர் மற்றும் குதிரைமொழி கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும், என்றார்.
முன்னதாக கூட்டத்தில் இக்குழுவின் உறுப்பினர்களான வி.அமலு, பெ.பெரியபுள்ளான் என்ற செல்வம், அ.நல்லதம்பி, வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி, ஆட்சியர் சங்கர் லால் குமாவத், எம்எல்ஏக்கள் முருகேசன் (பரமக்குடி), கருமாணிக்கம் (திருவாடானை), ஆ.மகாராஜன்(ஆண்டிபட்டி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திசைவீரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago