டிஏபி உரத்துக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் பயன்படுத்தலாம் : விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் டிஏபி அடி உரத்துக்கு மாற்றாக மணிச்சத்து அடங்கிய காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் டாம்.பி.சைலஸ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு 1,19,000 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது களை எடுத்தல், உரமிடுதல் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

யூரியா 2,043 டன், டிஏபி 950 டன், பொட்டாஷ் 150 டன், காம்ப்ளக்ஸ் 1,370 டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது.

விவசாயிகள் அதிக அளவில் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா,ரைஜோபியம் மற்றும் அங்கக உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுாட்ட உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த உயிர் உரங்களை மணல் அல்லது தூள் செய்த குப்பை எருவுடன் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

மண்ணில் போதுமான அளவு பாஸ்பரஸ் (மணிச்சத்து) மற்றும் பொட்டாஷ்(சாம்பல்) சத்துகள் இருப்பதால் விவசாயிகள் மண்வள அட்டை அடிப்படையில் உரமிட வேண்டும். மேலும் டிஏபி உரத்துக்கு பதிலாக மணிச்சத்துள்ள காம்ப்ளக்ஸ் உரங்களான 16:20:0:13, 20:20:0:13, 17:17:17, 16:16:16, 15:15:15, 10:26:26 ஆகியவற்றை ஏக்கருக்கு 1 மூட்டை வீதம் அடியுரமாக பயன்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் டாம்.பி.சைலஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE