திண்டுக்கல் அருகே - 12 டன் ரேஷன் அரிசி, 3 டன் கோதுமை கேரளாவுக்கு லாரியில் கடத்தல் : ஓட்டுநர் தப்பியோட்டம், லாரி பறிமுதல்

By செய்திப்பிரிவு

கேரளாவுக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி, 3 டன் கோதுமை ஆகியவற்றுடன் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின் னாளபட்டி அருகே கலிக்கம்பட்டி பிரிவு பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவுக்கு புறப் பட்டது. லாரி பிரதான சாலையை அடைவதற்கு முன்பாக மண் சாலையில் சென்றபோது மழையால் ஏற்பட்ட சகதியில் சிக்கியது. இதனால் அந்த வழியே வேறு வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் ஜேசிபி கொண்டு லாரியை நகர்த்தும் பணி நடந்தது. அந்தவழியே சென்ற அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் இதைப் பார்த்து அருகில் சென்று விசாரித்தார்.

அப்போது லாரியில் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரிந்தது. உடனடியாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் அளித்தார். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ. உமாதேவி தலைமையில் போலீஸார் வந்து லாரியை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். லாரி ஓட்டுநர் தலைமறைவாகி விட்டார். கிளீனர் கோகுல் மட்டும் சிக்கினார். இவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த நிசாந்த் என்பவருக்கு ரேஷன் அரிசி 12 டன், கோதுமை 3 டன் கடத்திச் செல்வது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய வீட்டை வாடகைக்கு விட்ட சின்னாளபட்டியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்