காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் - காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் காவலர் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வின்போது நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்படும்.

இந்த ஆண்டு நாடு முழுவதும் பணியின்போது 377 காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தும் வகையில் காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 63 குண்டுகள் முழங்க காவல் துறை சரக துணைத் தலைவர் எம்.சத்யபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோல் பெரும்புதூர் காவல் நிலையத்தில் ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பின்போது உயிரிழந்த 9 காவலர்களுக்கு நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. அந்த நினைவுத் தூணுக்கும் காவலர் வீரவணக்க நாளையொட்டி போலீஸார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் ``காவலர் வீர வணக்க நாள்'' உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

பல்லாவரம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை சரக காவல் இணை ஆணையர் நரேந்திர நாயகர், துணை ஆணையர் அருள் பாலகோபாலன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையராக பணிபுரிந்து கரோனா தொற்றால் உயிரிழந்த ஈஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், எஸ்.பி. வருண்குமார், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள், காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் பங்கேற்று நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்