கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் காவலர் வீரவணக்க நாள் :

By செய்திப்பிரிவு

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை (சிஆர்பிஎப்) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.இந்த வீர வணக்க நாள் நேற்று நடைபெற்றது.

கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நானை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன் ஆகியோர் இராணுவ நினைவு தூண் முன்பு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். 63 குண்டுகள் மூன்று முறை முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப் பாளர் அசோக்குமார், கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லோகநாதன், தனிப்பிரிவு காவல் ஆய்வா ளர் செந்தில்விநாயகம், காவல் ஆய்வாளர் குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தலைமையில் 60 குண்டுகள் முழங்க வீரவணக்க மரியாதை செலுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் நிகழ்வில் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நாதா கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரியில் மலர் வளையம் வைத்து முதல்வர் மரியாதை

புதுச்சேரி காவல்துறை சார்பில் கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி, மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் அங்குள்ள காவலர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவர்களை தொடர்ந்து அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்தமோகன் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டு காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, நாடு முழுவதும் உயர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்