கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியத்தில் - பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.32 கோடி பால்பண நிலுவை : விவசாய சங்க மாநிலத் தலைவர் தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.32 கோடி பால்பண நிலுவை உள்ளதாக, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்களுக்கு பால்பண நிலுவை கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியம் வழங்க வேண்டிய பாக்கி 100 நாட்களை கடந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டருக்கு 32 லட்சம் ரூபாய் என 100 நாட்களுக்கு 32 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், புதிய அரசு பொறுப்பேற்றதும் ஒரு லிட்டருக்கு ரூ.3 வீதம் பால் விலையைக் குறைத்தது. இதனை சரிசெய்ய மானியம் வழங்காதது.

தருமபுரி ஆவின் ஒன்றியத்தில் இருந்து கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியத்தை பிரித்த போது, பணியாளர்களை சரி சமமாக பிரிக்காமல் தருமபுரி ஒன்றியம் 20 சதவீதம் பணியாளர்களை மட்டும் எடுத்துக் கொண்டு, கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 80 சதவீதம் பணியாளர்களை எடுத்துக் கொண்டதால், ஒவ்வொரு மாதமும், ரூ.40 லட்சம் கூடுதலாக செலவாகிறது.

மேலும், தனியார் பால் நிறுவனத்துக்கு கடந்த காலத்தில் தருமபுரி பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட பாலுக்குண்டான பணத்தை, கிருஷ்ணகிரி ஆவின் ஒன்றியத்தில் இருந்து வழங்கப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனம் கிருஷ்ணகிரி ஒன்றியத்துக்கு பணம் தராமல் மோசடி செய்துள்ளது.

தீபாவளிக் குள் நிலுவையில் உள்ள பால் பணம் முழுவதும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வைத்தும், உயர் அலுவலர்களுக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,தமிழக முதல்வர், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்