தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துவரும் பொதுமக்கள், இதுதொடர்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாநகரில் தஞ்சாவூர் அகழி மற்றும் கோட்டைமேடு பகுதியான வடக்கு அலங்கம், மேல அலங்கம், சீனிவாசபுரம், செக்கடி உள்ளிட்ட இடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஸ்மார்ட் திட்டப் பணிகளுக்காக இப்பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாகவும், இங்கு வசிப்பவர்களுக்கு பிள்ளையார்பட்டி பகுதியில் வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதை பொதுமக்கள் ஏற்க மறுத்துவருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்களுடன் தஞ்சாவூரில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்தது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணிக்கே கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு வந்தனர். ஆனால், மதியம் 1 மணிவரை கூட்டம் நடத்தப்படாததால், பொதுமக்கள் அரங்கத்தில் இருந்து வெளியேறி, அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: 3 தலைமுறையாக வசித்து வரும் கோட்டைமேடு பகுதியைவிட்டு வெளியேற மாட்டோம். இதுதொடர்பாக, ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்ததால் வந்தோம். தஞ்சாவூர் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் வராததால் கூட்டம் நடத்தப்படவில்லை. அதனாலேயே போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
அவர்களுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் தனசேகரன், உதவி நிர்வாகப் பொறியாளர் யோகேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, தீபாவளி முடிந்த பின்னர், எம்.பி, எம்எல்ஏக்களிடம் பேசி, தேதி முடிவு செய்து, மீண்டும் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago