தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல இறுதிக்கட்டத் தேர்தல் பேராயர் தேவசகாயம் தலைமையில் நாசரேத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. எஸ்.டி.கே.ராஜன் மற்றும் டி.எஸ்.எப். அணியினர் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்டவர்கள் திருமண்டல உபதலைவர், குருத்துவச் செயலாளர், லே செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பதற்காக தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருமண்டல அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பேராயர் தேவசகாயமும் அங்குஇல்லாததால் ஏமாற்றமடைந்த நிர்வாகிகள், அலுவலக வாசலில்அமர்ந்திருந்த பிரதம பேராயரால்நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடம் அலுவலகத்தை திறக்குமாறுகூறினர். அதற்கு அவர், பேராயர்வந்தால்தான் திறக்க முடியும்என்று தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எதிரணியினரும் அங்கு வந்தனர். இரு அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர்.
பின்னர், நாசரேத்தில் இருந்துகொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டியை அங்கிருந்த ஒரு அறையில் வைத்து போலீஸார் சீல் வைத்தனர். பின்னர், அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தாங்கள் பதவியேற்க வேண்டும் என்று கூறி வெளியில் செல்ல மறுத்தனர். அவர்கள் தவிர மற்றவர்களை போலீஸார் வெளியேற்றினர். புதிய நிர்வாகிகள் அங்கிருந்த அறையில் மாலைவரை அமர்ந்திருந்தனர்.
லே செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் நிருபர்களிடம் கூறும்போது, ``தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்கள் அணி முழுமையாக வெற்றிபெற்றது. இதனால், தேவையில்லாத குற்றசாட்டுகளை கூறுகின்றனர். பேராயரை கூட மாலை வரை வரவிடாமல் செய்து விட்டனர். அவர் வராததால் விதிப்படி உபதலைவர் முன்னிலையில் நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டோம். முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தினோம்” என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago