பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை திருட்டு - தி.மலை அருகே 2 இளைஞர்கள் கைது : 50 மணி நேரத்தில் சுற்றி வளைத்த காவல் துறையினர்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் பிஎஸ் என்எல் அதிகாரி வீட்டில் 35 பவுன் நகையை திருடிய 2 இளை ஞர்களை 50 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய் துள்ளனர்.

திருவண்ணாமலை நகரம் அவலூர்பேட்டை சாலை, எம்ஆர்டி நகர் 2-வது வீதியில் வசிப்பவர் கிருஷ்ணகுமார்(37). திருவண்ணாமலை பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளராக பணி யாற்றி வருகிறார். இவர், வீட்டை பூட்டி விட்டு, மனைவி மற்றும் மகனுடன், திருவண்ணாமலை அடுத்த ராந்தம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 18-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சென்றுள்ளார். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் முன் பக்க கிரீல் கதவு மற்றும் மரக்கதவு பூட்டை உடைத்து, படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்த 35 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயம் சேகரிக்கப்பட்டது. இது குறித்து தி.மலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில், திருவண் ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், திருடு நடைபெற்ற வீட்டில் சேகரிக்கப்பட்ட தடயங்களுடன், குற்ற சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றிருந்த நபர்களின் தடயங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தில் வசிக்கும் வேலு(38) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ஜெயக்குமார்(39) ஆகிய பழைய குற்றவாளிகள் என தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அதில் கிடைத்த தகவலின் பேரில், தி.மலை – திருக்கோவி லூர் சாலையில் எடப்பாளையம் சந்திப்பில், இரு சக்கர வாகனத்தில் வந்த வேலு மற்றும் ஜெயக்குமாரை தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தி.மலை எம்ஆர்டி நகர் மற்றும் தெள்ளானந்தல் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 32 பவுன் நகை மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 18-ம் தேதி பிற்பகல் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை, 50 மணி நேரத்தில் (20-ம் தேதி மாலை) காவல் துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்