வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை - கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்பாடு : ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற உள்ள 6-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் 1,350-க்கும் மேற்பட்ட சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள், அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தொழிலாளர்களின் தகவல்களை கோவின் செல்போன் செயலி வழியாக கண்டறிய வேண்டும்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் முழு அனுமதியுடன் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 85 ஆயிரம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் சனிக்கிழமை (நாளை) நடைபெற உள்ள முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயல்பட வேண்டும். புள்ளி விவரங்களை சேகரித்து பின்னர் தங்கள் தொழில் நிறுவனத்தில் எவ்வளவு நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்ற விவரங்களுடன் அந்த இடத்தில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும். இந்த நடவடிக்கை வாரம் முழுவதும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் முகமது கனி, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் மணிமாறன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலேசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பேசும்போது, ‘‘மாவட்டத்தில் சனிக்கிழமை (நாளை) 1,000 மையங்களில் சுமார் 80 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய அனைத்து அதிகாரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த முகாமில் வெளி மாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று பயனடைய வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்