வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - 565 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் :

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சியில் 565 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் காவல் துறையினர் பாதுகாப்புடன் இன்று நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி, 7 ஊராட்சி ஒன்றியம், 245 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தமுள்ள 2,467 பதவிகளுக்கு வெற்றிபெற்றவர்கள் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி, 7 ஊராட்சி ஒன்றியம், 288 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 2,648 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சி, 14 ஊராட்சி ஒன்றியங்களில் நெமிலியை தவிர்த்து மற்ற 13 ஒன்றியங்களில் திமுக வசம் ஆகியுள்ளது. நெமிலி ஒன்றியத்தை கைப்பற்ற திமுகவுக்கு 2 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் அதிமுக, பாமக மற்றும் 2 சுயேட்சை கவுன்சிலர்கள் இடையே குதிரை பேரம் நடைபெற்று வருகிறது. இதில், தற்போதைய நிலை வரை அங்கு திமுக கை ஓங்கி இருப்பதாகவே கூறப்படுகிறது. காவேரிப்பாக்கம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுக, அதிமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், குடியாத்தம் ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கும், கே.வி.குப்பம் மற்றும் வேலூர் ஒன்றியத்தில் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றவும் திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கே.வி.குப்பம் ஒன்றியத்தில் துணைத் தலைவர் தேர்வில் அக்கட்சி கவுன்சிலர்கள் இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்ட ஊராட்சியில் தலைவர் பதவிக்கு திமுகவின் அணைக்கட்டு மு.பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், துணைத் தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்ததகவலால் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு துணைத் தலைவர் பதவியை கொடுக்கக்கூடாது என திமுக கவுன்சிலர்கள் அதிருப்தி குரலை எழுப்பியுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

வேலூர் மாவட்டத்தில் 261 பதவிகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 304 பதவிகள் என மொத்தம் 565 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடை பெறவுள்ளது.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை 10 மணிக்கு தலைவர் பதவிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், போட்டி இருந்தால் மட்டும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும், போட்டியில் யாரும் இல்லாவிட்டால் போட்டி யின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என கூறப் பட்டுள்ளது.

உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதால் பிரச்சினைகள் எழாமல் இருக்க காவல் துறையினர் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்காக, வேலூர் மாவட்டத்தில் சுமார் 700 காவலர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 600 காவலர்களும் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்