காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரிதிநிதிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த அக். 6 மற்றும் 9-ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த அக். 12-ம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக 11 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினராக 98 பேரும், கிராம ஊராட்சி தலைவராக 273 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக 1,938 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்திலும், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும்மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 3,208 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 197 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 3,011 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் நேற்று காலை பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் பதவிஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு இருந்தன.தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள்தங்களுக்கு உரிய அலுவலகங்களில் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்தில் பலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர்ஆகிய பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல் வரும் 22-ம் தேதி நடைபெறஉள்ளது. சமரச பேச்சுவார்த்தை மூலம் தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 38 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களில், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 3-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த காயத்ரியை தவிர, மற்ற 37 பேர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago