கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 10 ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், காங்கிரஸார் எம்பி செல்லக்குமார் தலைமையில் நாற்று நட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நேற்று காலை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நடராஜன், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவா் சேகர், மேலிட பொறுப்பாளர் இளஞ்செழியன், விவசாய அணி நிர்வாகி நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் எம்பி பேசியதாவது:
கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் கடந்த 10 ஆண்டுகள் கடந்தும் இதுவரை நிறைவு பெறவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மிட்டப்பள்ளி - பாலமந்திரி பை-பாஸ் சாலை பிரிவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், இச்சாலை வழியாக திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் இச்சாலையில் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இச்சாலை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இச்சாலை பணிகள் நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலையில் நாற்றுக்கள் நட்டும், சாலையில் அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago