கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மழையளவு மில்லிமீட்டரில், ஊத்தங்கரை 23.80, தேன்கனிக்கோட்டை 8, நெடுங்கல் 4, கிருஷ்ணகிரி 1 பதிவாகி இருந்தது.
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதி களிலும், கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு குறைந்ததால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை சரிந்தது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 1320 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றிலும், பாசனக் கால்வாய்களிலும் விநாடிக்கு 1320 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் 50.75 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
பென்னாகரம் பகுதியில் கனமழை
தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக பென்னாகரம் பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.இதுதவிர, பாலக்கோடு பகுதியில் 11 மி.மீட்டர், தருமபுரி பகுதியில் 7 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதர சில பகுதிகளில் மிதமான தூறலுடன் கூடிய மழை மட்டுமே பெய்தது. பென்னாகரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏரிகள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago