பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மலைச்சாமி, நிர்வாகிகள் ராஜா, ஜான்பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆட்டோ புதுப்பித்தல் காலங்களில் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
நலவாரிய புதுப்பித்தலுக்கு ஆன்லைன் முறையை எளிமைப்படுத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் குறைந்தபட்சம் மாதம் ரூ. 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் மூலம் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். அபராதத் தொகையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தை மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் தொடங்கி வைத்தார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் முடித்து வைத்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், தலைவர் வெ.சேவையா, பொருளாளர் தி.கோவிந்தராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago