மழைநீர் வடிகால் அமைக்கும் பணியால் உடுமலையில் முக்கிய சாலைகள் அடைப்பு : ஜவுளி விற்பனை பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் புகார்

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக சாலைகளின் நடுவே சிறு பாலங்கள் அமைக்கும் பணிக்காக வ.உ.சி வீதி, கச்சேரிவீதி, வக்கீல் நாகராஜன், பசுபதி, சீனிவாசா வீதிகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. தளி, பழநி, நேதாஜி சாலைகளில் வாகனங்கள் செல்வதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, சாலைகள் அடைக்கப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக கடைகள் அடைப்பு, ஊரடங்கு காரணமாக வியாபாரம் முடங்கியது. கடை வாடகை, ஊழியர் சம்பளம், மின்கட்டணம் என சிறு வியாபாரிகள் முதல் மொத்த வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பொதுமுடக்கம் விலக்கி கொள்ளப்பட்டு, வியாபார நிறுவனங்கள் வழக்கம்போல செயல்பட தொடங்கியதால், சற்றே நிம்மதியடைந்தோம். ஆனால்உடுமலை நகரின் முக்கிய சாலைகளை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக ஒரே நேரத்தில் முடக்கியதால், வாடிக்கையாளர் வரமுடியாத நிலையுள்ளது. இதனால் ஜவுளி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வழக்கம்போல பொதுமக்கள் சென்று வரும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒப்பந்த காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வியாபாரிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE