பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், திருப்பூர் மாநகரில் புதிதாக ‘பிங்க்’ ரோந்து முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரில் சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள் 8, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 2 என 10 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநகரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், குற்றங்கள் நடந்தால் சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்கவும் வசதியாக ‘பிங்க்’ ரோந்து முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் வே. வனிதா நேற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இரு சக்கர வாகனங்களை பெண் போலீஸாருக்கு வழங்கிய பின்பு, மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் நகரில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பெண்கள் அதிகமாக பணிபுரியக் கூடிய இடங்கள், பொது இடங்களில் ரோந்து செய்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். முற்றிலும் பெண் போலீஸாரை கொண்டு ‘பிங்க் பீட்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென தனியாக94981 81209 என்ற மொபைல் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண், மாநகர கட்டுப்பாட்டுஅறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு வரும் புகார் குறித்து உடனடியாக ‘பிங்க்’ ரோந்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்படும். நகரில், 7 ரோந்துகள் தொடங்கப்பட்டு, பெண் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago