மேட்டூர் அணை நீர்மட்டம் 92.44 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16,197 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 16,012 கனஅடியானது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.
இதனால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 550 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நீர்வரத்தை விட நீர்திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 91.32 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 92.44 அடியானது. நீர்இருப்பு 55.48 டிஎம்சி-யாக உள்ளது.
ஒகேனக்கல்லில் 12 ஆயிரம் கனஅடி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன் தினம் காலை விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாகவும், மாலை அளவீட்டின்போது விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து இருந்தது. நேற்று காலை அளவீட்டின்போதும் விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி என்ற அளவிலேயே நீர்வரத்து நீடித்தது. இந்நிலையில், நேற்று மாலை அளவீட்டின்போது விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago