ஈரோட்டில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் கைது : வீட்டில் பதுக்கிய 350 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 30 பேரை போலீஸார் கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், மாவட்டம்முழுவதும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதோடு, பல்வேறு இடங்களில் போலீஸார் வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

மேட்டூர்-பவானி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த வேனைசோதனையிட்டனர். இதில், பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 86 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, பவானியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22), முனுசாமி (45), ரத்தினபாண்டியன் (57), நாமக்கல்லைச் சேர்ந்த தினேஷ் குமார் (23) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு வீரப்பன்சத்திரம், பவானி அம்மாப்பேட்டை, பெருந்துறை, அந்தியூர், கடத்தூர், வெள்ளித்திருப்பூர், கோபி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

350 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு நொச்சிக்காட்டுவலசு பகுதியில் உள்ள ஒரு வீட்டில், அரசால்தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார்அங்கு சோதனை மேற்கொண்டனர். அங்கு 350 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நாட்ராயன் (39) என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்